search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அரசு வேலை"

    • அரசு வேலைகளில் பெண்களுக்கு 50 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்படும்.
    • பெண்கள் இந்தியாவின் தலைவிதியை மாற்றுவார்கள் என்றார் ராகுல் காந்தி.

    புதுடெல்லி:

    காங்கிரஸ் கட்சி எம்.பி.யான ராகுல் காந்தி எக்ஸ் வலைதளத்தில் வெளியிட்டுள்ள செய்தியில் கூறியதாவது:

    இன்றும் மூன்றில் ஒரு பெண் மட்டுமே ஏன் வேலை செய்கிறார்? 10 அரசு வேலைகளில் ஒரு பெண் மட்டும் ஏன்?

    இந்திய மக்கள் தொகையில் பெண்களின் எண்ணிக்கை 50 சதவீதம் இல்லையா?

    மேல்நிலை மற்றும் உயர்கல்வியில் பெண்களின் பங்கு 50 சதவீதம் இல்லையா? அவர்களின் பங்கு ஏன் குறைவாக உள்ளது?

    மக்கள் தொகையில் பாதியாக இருப்பவர்களுக்கு அனைத்து உரிமைகளும் கிடைக்க வேண்டும் என காங்கிரஸ் விரும்புகிறது.

    பெண்களுக்கு சமமான பங்களிப்பு இருந்தால் மட்டுமே பெண்களின் திறன் முழுமையாகப் பயன்படுத்தப்படும் என்பதை நாங்கள் புரிந்துகொள்கிறோம்.

    அனைத்து புதிய அரசுப் பணிகளிலும் 50 சதவீதம் பெண்களுக்கு ஒதுக்கப்பட வேண்டும் என காங்கிரஸ் முடிவு செய்துள்ளது.

    பாராளுமன்றம் மற்றும் சட்டசபையில் பெண்களுக்கான இடஒதுக்கீட்டை உடனடியாக அமல்படுத்த வேண்டும் என்பதில் நாங்கள் உறுதியாக உள்ளோம்.

    பாதுகாப்பான வருமானம், பாதுகாப்பான எதிர்காலம், ஸ்திரத்தன்மை மற்றும் சுயமரியாதை உள்ள பெண்கள் உண்மையிலேயே சமூகத்தின் சக்தியாக மாறுவார்கள்.

    50 சதவீத அரசுப் பதவிகளில் பெண்களைக் கொண்டிருப்பது நாட்டின் ஒவ்வொரு பெண்ணுக்கும் பலத்தைத் தரும். பெண்கள் இந்தியாவின் தலைவிதியை மாற்றுவார்கள் என தெரிவித்தார்.

    • கேரளாவில் 119 நிறுவனங்கள் முதலீடு மூலம் 5 லட்சத்திற்கும் அதிகமான வேலைகள் உருவாக்கப்பட்டுள்ளது
    • கேரள அரசின் முதலீடு மற்றும் வேலைவாய்ப்பு உருவாக்கம் கடந்த 8 ஆண்டுகளில் மிகவும் குறைந்துள்ளது

    கேரள சமூக ஆர்வலர் கோவிந்தன் நம்பூதிரி கேரளாவில் 8 ஆண்டுகளில் அரசு சார்பில் மக்களுக்கு எத்தனை வேலை வாய்ப்புகள் வழங்கப்பட்டு உள்ளது என்பது குறித்து தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் (RTI) கேட்டு மனு தாக்கல் செய்திருந்தார்.

    தற்போது அவரது மனுவுக்கு அரசு சார்பில் அளித்த பதில் வருமாறு:-

    2016 முதல் 2024 வரையிலான 8 ஆண்டுகளில் கேரள மாநில அரசு சார்பில் ரூ.1520.69 கோடி முதலீட்டில் 5,839 பேருக்கு வேலைகள் உருவாக்கி வழங்கப்பட்டு உள்ளது. கேரள மாநில தொழில் வளர்ச்சிக் கழகம் (KSIDC)வழங்கிய நிதி உதவியால் கேரளாவில் 119 நிறுவனங்கள் முதலீடு செய்து ஊக்குவித்துள்ளன. இதன் மூலம் 5 லட்சத்திற்கும் அதிகமான வேலைகள் உருவாக்கப்பட்டுள்ளது.

    தொழில் வர்த்தக இயக்குனரகம் கடந்த 22 மாதங்களில் 2,36,384 நிறுவனங்கள் மூலம் ரூ.14,922 கோடி முதலீடு செய்துள்ளது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

    இது குறித்து கோவிந்தன் நம்பூதிரி கூறியதாவது:-

    கேரள அரசின் முதலீடு மற்றும் வேலைவாய்ப்பு உருவாக்கம் கடந்த 8 ஆண்டுகளில் மிகவும் குறைந்துள்ளது. எனவே கேரள மாநில அரசு முன் முயற்சி நடவடிக்கை எடுத்து உடனடியாக வேலைவாய்ப்புகளை மேம்படுத்த வேண்டும். இவ்வாறு  அவர் கூறினார்.

    • ஓய்வூதியதாரர்களுக்கு பழைய திட்டம் கொண்டு வரப்படும் என்றும் காங்கிரஸ் சார்பில் வாக்குறுதி அளிக்க வாய்ப்பு இருக்கிறது.
    • ராகுல்காந்தி வெளியிட்ட எக்ஸ்தள பதிவில் இந்தியா முழுவதும் 78 துறைகளில் சுமார் 9.66 லட்சம் இடங்கள் காலியாக இருப்பதாக சுட்டிக்காட்டி இருந்தார்.

    பாரதிய ஜனதாவுக்கு சவால் விடும் வகையில் இந்த தடவை தேர்தல் அறிக்கை வெளியிட வேண்டும் என்று காங்கிரஸ் தலைவர்கள் திட்டமிட்டுள்ளனர்.

    இதற்காக காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் தலைமையில் தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழு உருவாக்கப்பட்டுள்ளது. இந்த குழு மாநிலம் வாரியாக காங்கிரஸ் நிர்வாகிகளிடமும், பொதுமக்களிட மும் கருத்துக்கள் கேட்டு தேர்தல் அறிக்கையை தயாரித்து வருகிறது.

    ப.சிதம்பரம் தலைமையிலான தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழு நேற்று டெல்லியில் இறுதி கட்ட ஆலோசனை கூட்டத்தை நடத்தியது. அதில் பல்வேறு வாக்குறுதிகளுக்கு ஒப்புதல் பெறப்பட்டது.

    இன்று (செவ்வாய்க் கிழமை) 2-வது நாளாக ப.சிதம்பரம் தலைமையில் காங்கிரஸ் தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழு டெல்லியில் கூடி ஆலோசனை நடத்தி யது. இதில் காங்கிரஸ் தேர்தல் அறிக்கைக்கு இறுதி வடிவம் கொடுக்கப்படுகிறது.

    இந்த வார இறுதியில் காங்கிரஸ் தேர்தல் அறிக்கை வெளியாக வாய்ப்பு இருக்கிறது. அந்த அறிக்கையில் பெண்கள், ஏழைகள், இளைஞர்கள், பிற்படுத்தப்பட்டவர்கள், சிறு-குறு தொழில் செய்பவர்கள், மாணவர்கள் ஆகியோருக்கு சிறப்பு கவனம் செலுத்தும் வகையில் புதிய திட்டங்கள் அறிவிக்கப்படும் என்று எதிர் பார்க்கப்படுகிறது.

    வேளாண் விளைப்பொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு சட்டம் கொண்டு வருவது பற்றியும், சாதிவாரி அடிப்படையில் கணக்கெடுப்பு நடத்துவது பற்றியும் தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி அளிக்கப்படும்.

    இவை தவிர அரசு வேலை வாய்ப்புகளை அதிகமாக உருவாக்குவது பற்றியும் தேர்தல் அறிக்கையில் முக்கிய அறிவிப்பு வெளியாகும் என்று எதிர் பார்க்கப்படுகிறது. நேற்று ராகுல்காந்தி வெளியிட்ட எக்ஸ் தள பதிவில் இந்தியா முழுவதும் 78 துறைகளில் சுமார் 9.66 லட்சம் இடங்கள் காலியாக இருப்பதாக சுட்டிக்காட்டி இருந்தார்.

    எனவே இதன் அடிப்படையில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் 10 லட்சம் பேருக்கு உடனடியாக அரசு வேலை தரப்படும் என்று தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி அளிக்கப்படும் என்று எதிர் பார்க்கப்படுகிறது.

    மேலும் ஓய்வூதியதாரர்களுக்கு பழைய திட்டம் கொண்டு வரப்படும் என்றும் காங்கிரஸ் சார்பில் வாக்குறுதி அளிக்க வாய்ப்பு இருக்கிறது.

    • வருவாய்த் துறையில் 2,996 பணியிடங்கள் நிரப்பட்டுள்ளது.
    • கல்வித்துறையில் 1,847 பணியிடங்கள் நிரப்பப்பட்டுள்ளது.

    தமிழ்நாட்டில் கடந்த 3 ஆண்டுகளுக்குள் 60,567 பேருக்கு அரசு பணிகளில் நியமனம் செய்யப்பட்டுள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.

    துறைவாரியாக பணி நியமனம் குறித்து தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது. இதில், சுகாதாரம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறையில் 4,286 பணியிடங்கள் நிரப்பப்பட்டுள்ளது.

    ஊரக வளர்ச்சித் துறையில் 857 பணியிடங்களும், உயர் கல்வித் துறையில் 1,300 பணியிடங்களும் நிரப்பப்பட்டுள்ளது.

    நீதித்துறையில் 5,981 பணியிடங்களும், பள்ளிக் கல்வித்துறையில் 1,847 பணியிடங்களும் நிரப்பப்பட்டுள்ளது. வருவாய்த் துறையில் 2,996 பணியிடங்கள் நிரப்பட்டுள்ளது. 

    அரசுத் துறைகள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகள் மூலமாக, ஜனவரி 2024 வரை 32,709 நபர்கள் பணி நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

    இளைஞர்களுக்கு பல்லாயிரக் கணக்கில் வேலை வாய்ப்பினை உருவாக்கிட உலக முதலீட்டாளர்கள் மாநாடும் நடத்தப்பட்டது.

    இளைஞர்களுக்கு இந்தியா மற்றும் பன்னாட்டு நிறுவனங்களில் வாய்ப்புகளை உருவாக்கிட வழிவகை செய்யப்பட்டுள்ளது.

    • ரூ.50 லட்சம் முதல் 1 கோடி வரை லோன் பெற்று தருவதாகவும் அதற்கு முன்பணமாக ரூ.1 லட்சம் முதல் 2 லட்சம் வரை தர வேண்டும் என கூறியுள்ளார்.
    • மேலும் பணம் கொடுத்து ஏமாந்தவர்கள் புகார் தெரிவிக்கலாம் எனவும் போலீசார் கேட்டுக் கொண்டுள்ளனர்.

    திருப்பூர்:

    திண்டுக்கல் மாவட்டம் கன்னிவாடி பகுதியை சேர்ந்தவர் சின்னையா (வயது 46). இவர் திருப்பூர் பெருமாநல்லூர் ஈஸ்வரன் கோவில் வீதியில் கிரேஸ் ஹெல்ப் சென்டர் என்ற நிறுவனம் நடத்தி வந்தார். இந்த நிறுவனத்தின் மூலம் வங்கி லோன் மற்றும் கறவை மாடுகள் வாங்க கடன் பெற்று தருவதாக அறிவிப்பு வெளியிட்டிருந்தார்.

    இதையடுத்து பெருமாநல்லூர், அவிநாசி, திருப்பூர் பகுதிகளை சேர்ந்த ஏராளமான விவசாயிகள்,பொது மக்கள் கடன் பெற்று தரும்படி சின்னையாவிடம் கேட்டுக்கொண்டனர். அப்போது அவர் ரூ.50 லட்சம் முதல் 1 கோடி வரை லோன் பெற்று தருவதாகவும் அதற்கு முன்பணமாக ரூ.1 லட்சம் முதல் 2 லட்சம் வரை தர வேண்டும் என கூறியுள்ளார். இதனை நம்பி பொதுமக்கள் சிலர் பணம் கொடுத்துள்ளனர்.

    இதேபோல் வங்கியில் வேலை , மத்திய மாநில அரசு அலுவலக வேலை , ஆசிரியை வேலை வாங்கி தருவதாக கூறியும் ஏராளமானோரிடம் பணம் பெற்று ள்ளார்.ஆனால் பணத்தை பெற்று கொண்ட சின்னையா யாருக்கும் லோன் மற்றும் வேலை வாங்கி கொடுக்கவில்லை. பணம் கொடுத்தவர்கள் சென்று கேட்டபோது அவர் முறையான பதில் கூறாமல் திடீரென தலை மறைவாகி விட்டார்.

    இந்நிலையில் லோன் மற்றும் வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.14 லட்சத்து 50ஆயிரத்தை வாங்கி கொண்டு மோசடி செய்த சின்னையா மீது நடவடிக்கை எடுக்க கோரி பாதிக்கப்பட்ட 6 பேர் திருப்பூர் பெருமாநல்லூர் போலீசில் புகார் செய்தனர்.

    புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். மேலும் இன்ஸ்பெக்டர் வசந்தகுமார் தலைமையிலான போலீசார் விசாரணை நடத்தி தலைமறைவாக இருந்த சின்னையாவை கைது செய்தனர்.

    விசாரணையில் இவர் இதேபோல் ஏராளமானவரிடம் மோசடி செய்திருப்பதும் தெரியவந்தது. மேலும் பணம் கொடுத்து ஏமாந்தவர்கள் புகார் தெரிவிக்கலாம் எனவும் போலீசார் கேட்டுக் கொண்டுள்ளனர்.

    • கலெக்டர் அலுவலகத்தில் மனு
    • மின்சாரம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லை. இதனை செய்து தர வேண்டும் என குறிப்பிட்டுள்ளனர்.

    நாகர்கோவில் :

    நாகர்கோவில் கலெக்டர் அலுவலகத்தில் இன்று குமரி மாவட்ட மக்கள் குறைதீர்ப்பு கூட்டம் நடந்தது. மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஏராளமானோர் திரண்டு வந்து மனு கொடுத்தனர். அவர்களிடம் கலெக்டர் ஸ்ரீதர் மனுக்களை பெற்றார்.

    விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் கொடுக்க ப்பட்ட மனுவில், மர்மமாக இறந்த குலசேகரம் கோட்டூர் கோணம் பகுதியைச் சேர்ந்த டிரைவர் சுந்தர்ராஜ் மரணம் குறித்து சப்-கலெக்டர் விசாரணை நடத்த வேண்டும். அவரது குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் நிவாரணம் மற்றும் அவரது மனைவிக்கு அரசு வேலை வழங்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டு இருந்தது.

    செண்பகராமன்புதூர் சமத்துவபுரம் மக்கள் கொடுத்த மனுவில், நாங்கள் மரப்பாலம் மலைப்பகுதியில் வசித்து வருகிறோம். எங்கள் பகுதியில் மின்சாரம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லை. இதனை செய்து தர வேண்டும் என குறிப்பிட்டுள்ளனர்.

    • ரேணுகா, சிபாமலீஸ்வரி மற்றும் அவர்களுக்கு ஏஜெண்டாக செயல்பட்ட ரெஜி ஞான பிரகாசம் ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.
    • மோசடிக்கு பயன்படுத்திய 5 செல்போன்கள், மோட்டார் சைக்கிள் போலி பணி நியமன ஆணைகள், விண்ணப்ப படிவங்கள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டன.

    சென்னை:

    சென்னை மாதவரத்தை சேர்ந்த பழனி என்பவரிடம் அதே பகுதியை சேர்ந்த ரேணுகா, அவரது மகள் சிபாமலீஸ்வரி ஆகியோர் அறிமுகமானார்கள்.

    அப்போது அவரிடம் தங்களுக்கு மத்திய-மாநில அரசு துறைகளில் உயர் அதிகாரிகளை தெரியும் என்று கூறியுள்ளனர். 'ஸ்டேட் பேங்க் ஆப் இண்டியா'வில் வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.3 லட்சத்து 37 ஆயிரம் பணத்தை ஏமாற்றி வாங்கி உள்ளனர். பின்னர் இந்த பணத்தை திருப்பி கொடுக்காமல் இருவரும் ஏமாற்றி மோசடி செய்துள்ளனர். இதுதொடர்பாக போலீஸ் கமிஷனர் சந்தீப்ராய் ரத்தோரிடம் அளிக்கப்பட்ட புகாரின் பேரில் மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதில் ரேணுகா, சிபாமலீஸ்வரி இருவரும் மத்திய அரசு நிறுவனங்களான பாஸ்போர்ட் அலுவலகம், குடியுரிமை பாதுகாப்பு அலுவலகம், சுங்கத்துறை அலுவலகம் மற்றும் பல்வேறு வங்கிகள் அலுவலகங்களில் வேலை வாங்கி தருவதாக கூறி 100-க்கும் மேற்பட்டவர்களிடம் ரூ.4½ கோடிக்கு மேல் மோசடியாக பணத்தை வாங்கி ஏமாற்றியிருப்பது தெரியவந்தது.

    இதன்பேரில் ரேணுகா, சிபாமலீஸ்வரி மற்றும் அவர்களுக்கு ஏஜெண்டாக செயல்பட்ட ரெஜி ஞான பிரகாசம் ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.

    அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் இருவரும் அரசு அதிகாரிகள் போல நடித்து நட்சத்திர ஓட்டல்களில் வைத்து நேர்முக தேர்வுகளை நடத்தி இருப்பது அம்பலமாகி உள்ளது.

    இதையடுத்து கைதான 3 பேரையும் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மோசடிக்கு பயன்படுத்திய 5 செல்போன்கள், மோட்டார் சைக்கிள் போலி பணி நியமன ஆணைகள், விண்ணப்ப படிவங்கள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டன. இந்த வழக்கில் உதவி கமிஷனர் சுரேந்திரன், இன்ஸ்பெக்டர் கலாராணி, சப்-இன்ஸ்பெக்டர்கள் ரமேஷ், சிட்டிபாபு காவலர் இளங்கோவன் உள்ளிட்டோர் சிறப்பாக துப்பு துலக்கி குற்றவாளிகளை கைது செய்துள்ளனர். அவர்களை கமிஷனர் சந்தீப்ராய் ரத்தோர் பாராட்டினார்.

    இதுதொடர்பாக போலீசார் கூறும்போது, "அரசியல் பிரமுகர்கள், அதிகாரிகளின் பெயரை சொல்லி ஏமாற்றுபவர்களிடம் பொதுமக்கள் உஷாராக இருக்க வேண்டும்" என்று தெரிவித்து உள்ளார்.

    • அருப்புக்கோட்டை அருகே அரசு வேலை வாங்கித் தருவதாக வாலிபரிடம் ரூ‌.9 லட்சம் மோசடி செய்யப்பட்டுள்ளது.
    • 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

    விருதுநகர்

    மதுரை ராமகிருஷ்ணா புரம் காலனி 8-வது தெருவை சேர்ந்தவர் ஜெயகாந்த் (வயது 36). இவர் கடந்த 2017-ம் ஆண்டு மனைவிக்கு அரசு வேலைக்காக முயற்சி செய்து வந்தார்.

    இந்த நிலையில் அவரது நண்பர்கள் மூலம் விருதுநகர் மாவட்டம் அருப்புக் கோட்டை அருகே உள்ள பந்தல்குடி நெடுங்கரைப்பட்டி பகுதியைச் சேர்ந்த ஜான் தேவபிரியம் என்பவர் அறிமுகமானார்.

    அவர் ஜெயகாந்த்திடம் மனைவிக்கு அரசு வேலை வாங்கித்தருவதாகவும், அதற்கு ரூ.6 லட்சம் தேவைப்படும் எனவும் தெரிவித்துள்ளார். இதனை நம்பிய ஜெயகாந்த் 2018-ம் ஆண்டு ரூ.6 லட்சத்தை கொடுத்ததாக கூறப்படு கிறது. அப்போது ஜான் தேவ பிரியம் சுகாதா ரத்துறையில் அரசு வே லைக்கான ஆணை வீடு தேடி வரும் என்று தெரிவித்தார். ஆனால் பல மாதங்கள் ஆகியும் எந்த முன்னேற்ற மும் இல்லை.

    இதுகுறித்து ஜெயகாந்த் கேட்டபோது, கிராம நிர்வாக அதிகாரி வேலை வாங்கி தருவதாகவும், அதற்கு கூடுதலாக ரூ.3 லட்சம் வேண்டுமென தெரி வித்துள்ளார்.

    அதையும் நம்பிய ஜெய காந்த் ஜான் தேவபிரிய னின் பெற்றோரிடம் ரூ.3 லட்சம் கொடுத்ததாக தெரி கிறது. மொத்தம் ரூ.9 லட்சத்தை பெற்றுக்கொண்ட அவர்கள் அரசு வேலை வாங்கி தரவில்லை.

    இதனால் அதிர்ச்சி அடைந்த ஜெயகாந்த் பணத்தை திருப்பித் தருமாறு கேட்டுள்ளார். ஆனால் அவர்கள் பண த்தை தராமல் மோசடி செய்ததாக கூறப் படுகிறது. இதுகுறித்து அவர் பந்தல்குடி போலீசில் புகார் செய்தார்.

    போலீசார் விசாரணை நடத்தி ரூ.9 லட்சம் மோ சடி செய்த ஜான் தேவப்பிரியம், அவரது தந்தை பால்துரை சிங், தாயார் ஆகிய 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

    • அடுத்த இரு ஆண்டுகளில் மேலும் 50 ஆயிரம் பேருக்கு அரசு வேலைகள் வழங்கப்பட இருப்பதாகவும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்திருக்கிறார்.
    • தமிழக அரசு பொறுப்பேற்ற போது இருந்ததைவிட இப்போது அரசு பணியாளர்களின் எண்ணிக்கை குறைந்திருக்கிறது. இது சாதனை அல்ல.

    சென்னை:

    பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    தமிழ்நாட்டில் தி.மு.க. அரசு அமைந்த பிறகு கடந்த இரு ஆண்டுகளில் 12,576 பேருக்கு அரசு வேலை வழங்கப்பட்டிருப்பதாகவும், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட 10,205 பேருக்கு நேற்று பணி ஆணைகள் வழங்கப்பட்டிருப்பதாகவும், அடுத்த இரு ஆண்டுகளில் மேலும் 50 ஆயிரம் பேருக்கு அரசு வேலைகள் வழங்கப்பட இருப்பதாகவும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்திருக்கிறார்.

    தமிழ்நாடு போன்ற பெரிய மாநிலங்களில் கடந்த இரு ஆண்டுகளில் வழங்கப்பட்டதாக கூறப்படும் அரசு வேலைகளின் எண்ணிக்கையும், அடுத்த இரு ஆண்டுகளில் வழங்கப்பட இருப்பதாக கூறப்படும் தமிழக அரசு வேலைகளின் எண்ணிக்கையும் போதுமானவை அல்ல.

    தமிழ்நாட்டில் கடந்த இரண்டரை ஆண்டுகளில் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அரசு ஊழியர்கள் ஓய்வு பெற்றுள்ளனர். ஆனால், ஓய்வு பெற்றவர்களின் எண்ணிக்கையில் பாதிக்கும் குறைவாக 22,781 பேருக்கு மட்டுமே அரசு வேலை வழங்கப்பட்டிருக்கிறது. ஒப்பீட்டளவில் தமிழக அரசு பொறுப்பேற்ற போது இருந்ததைவிட இப்போது அரசு பணியாளர்களின் எண்ணிக்கை குறைந்திருக்கிறது. இது சாதனை அல்ல.

    தமிழக அரசுத் துறைகளில் உள்ள காலியிடங்களை நிரப்பும் வகையிலும், தி.மு.க. ஆட்சிக்கு வந்தால் ஐந்தரை லட்சம் பேருக்கு அரசு வேலை வழங்கப்படும் என்று அளிக்கப்பட்ட வாக்குறுதியை நிறை வேற்றும் வகையிலும் நடப்பு நிதியாண்டில் குறைந்தது ஒன்றரை லட்சம் பேருக்கு அரசு வேலை வழங்கப்பட வேண்டும். அடுத்த இரு ஆண்டுகளில் ஆண்டுக்கு தலா 2 லட்சம் வீதம் 4 லட்சம் பேருக்கு அரசு வேலைகளை வழங்கவும் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

    • அரசு வேலை வாங்கி தருவதாக ஏமாற்றி ரூ.5 ½ லட்சம் மோசடி செய்த 2 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
    • டி.என்.பி.எஸ்.சி. தேர்வு முடிவுகள் வெளியான போது மகாலட்சுமிக்கு வேலை கிடைக்கவில்லை.

    விருதுநகர்

    சிவகாசி சாரதா நகர் பகுதியை சேர்ந்தவர் பாண்டியராஜன் (வயது62). பழக்கடை நடத்தி வருகிறார். இவரது மகள் மகாலட்சுமி.

    பட்டதாரியான இவர் ஜெராக்ஸ் எடுப்பதற்கு திருத்தங்கல் செங்கமல நாச்சியார்புரம் பகுதியில் உள்ள ஒரு கடைக்கு செல்வது வழக்கம். அந்த கடையின் உரிமையாளர் முத்து பாண்டியராஜனுக்கு அறிமுகமானவர்.

    அதனால் முத்துவிடம் தான் அரசு பொதுத் தேர்வுக்காக தயார் செய்து வருவதாக மகாலெட்சுமி கூறியுள்ளார். இதையடுத்து பாண்டியராஜனை சந்தித்த முத்து தனக்கு சிவகாசி சாட்சியாபுரத்தை சேர்ந்த ரவி என்பவரை தெரியும் என்றும், அவருக்கு தலைமை செயலகத்தில் நல்ல பழக்கம் உள்ளதாகவும், பலருக்கு ஏற்கனவே வேலை வாங்கி கொடுத்துள்ளதாகவும் கூறினார்.

    இதை நம்பிய பாண்டிய ராஜன் ரவியிடம் அதுபற்றி விசாரித்துள்ளார். அப்போது அவர் வேலை வாங்கி தர முடியும் என்றும் ரூ.5½ லட்சம் செலாகும் என்றும் கூறினார். இதைத் தொடர்ந்து கடந்த ஆண்டு 6 தவணைகளில் ரூ.5 ½லட்சம் ரவிக்கு பாண்டியராஜன் கொடுத்தார். அதன்பின்னர் டி.என்.பி.எஸ்.சி. தேர்வு முடிவுகள் வெளியான போது மகாலட்சுமிக்கு வேலை கிடைக்கவில்லை. இதையடுத்து ரவியிடம் விசாரித்த போது விரைவில் ஆர்டர் வரும் என்று கூறியுள்ளார்.

    அவர் கூறியபடி வணிக வரித்துறையில் பணி கிடைத்திருப்பதாக மகாலட்சுமிக்கு ஆர்டர் வந்துள்ளது. மகாலெட்சுமி அது குறித்து விசாரித்த போது அந்த ஆர்டர் போலியானது என தெரியவந்தது.

    இதையடுத்து ரவி, முத்துவிடம் பணத்தை திருப்பி கொடுக்குமாறு பாண்டியராஜன் கேட்டார். ஆனால் அவர்கள் பணத்தை கொடுக்க முடியாது என கூறி கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து சிவகாசி மாஜிஸ்திரேட் கோர்ட்டில் பாண்டியராஜன் வழக்கு தொடர்ந்தார். கோர்ட்டு உத்தரவின் பேரில் திருத்தங்கல் போலீசார் மோசடி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • தங்களுக்கு அரசியல் செல்வாக்கு இருப்பதாகவும் அரசு உயர் அதிகாரிகள் பழக்கம் இருப்பதாகவும் கூறி உள்ளனர்.
    • தல்லாகுளம் போலீசார் 3 பேர் மீது வழக்கு பதிவு செய்தனர்.

    மதுரை:

    திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை பச்சைமலையான் கோட்டை புதுகாமன் பட்டியைச் சேர்ந்தவர் செல்வராஜ். இவருக்கு மதுரை வருமான வரித்துறை அலுவலக பகுதியில் வசிக்கும் சண்முகத்துரை (58), அவரது மகள் அர்ச்சனா, தலைமைச் செயலகத்தில் வேலை பார்த்த குணசேகரன் ஆகியோர் ஒரு நண்பர் மூலமாக அறிமுகமாகினர்.

    இவர்கள் தங்களுக்கு அரசியல் செல்வாக்கு இருப்பதாகவும் அரசு உயர் அதிகாரிகள் பழக்கம் இருப்பதாகவும் கூறி உள்ளனர். இதனால் தங்களுக்கோ, தங்களுக்கு வேண்டிய நபருக்கோ அரசு வேலை வாங்கி தருவதாகவும் கூறி உள்ளனர்.

    அவர்களின் தகுதிக்கேற்ப, வேலைக்கு ஏற்ப பணம் செலவாகும் என கூறியுள்ளனர். இவர்கள் பேச்சை நம்பிய செல்வராஜ், நண்பர் ராஜேந்திரன், உறவினர் ராஜேஷ் ஆகியோர் ரேஷன் கடையில் வேலை வாங்கி தரும்படி கூறி உள்ளனர். இதற்காக 2020-ல் பல்வேறு தவணைகளில் ரூ.15 லட்சம் கொடுத்துள்ளனர். ஆனால் அவர்கள் கூறியபடி வேலை வாங்கி தரவில்லை. பணத்தை திருப்பி கொடுக்கவில்லை. இதை தொடர்ந்து மதுரை மாநகர போலீஸ் துணை கமிஷனரிடம் செல்வராஜ் புகார் செய்தார். அவருடைய உத்தரவின் பேரில் தல்லாகுளம் போலீசார் 3 பேர் மீது வழக்கு பதிவு செய்தனர். சண்முகத்துரை, அவருடைய மகள் அர்ச்சனா, குணசேகரன் ஆகிய 3 பேர் மீது வழக்கு பதிவு செய்து சண்முகத்துரையை கைது செய்தனர்.

    • ஒருவர் பட்டபடிப்பு படித்து விட்டு வேலை தேடிக் கொண்டிருந்தார்.
    • உன்னால் ஆனதைப் பார் என மிரட்டும் வகையில் அவர்கள் பேசியதாக கூறப்படுகிறது.

    பல்லடம்:

    பல்லடம் வடுகபாளையத்தை சேர்ந்த வாலிபர் ஒருவர் பட்டபடிப்பு படித்து விட்டு வேலை தேடிக் கொண்டிருந்தார். அப்போது வடுகபாளையம்புதூரை சேர்ந்த பிரமுகர் ஒருவர் கிராம உதவியாளர் வேலைக்கு அவரை சேர்த்து விடுவதாகவும், அதற்கு ரூ.6 லட்சம் செலவாகும் என்று கூறியுள்ளார். அரசு வேலைக்கு ஆசைப்பட்ட அந்த வாலிபரின் குடும்பத்தினர் அந்தப் பிரமுகரிடம் 2 தவணைகளாக ரூ. 6 லட்சம் கொடுத்ததாக கூறப்படுகிறது. ஆனால் பணம் கொடுத்து 10 மாதங்கள் ஆகியும் வேலை கிடைக்காததால் அவரிடம் பணத்தைத் திருப்பி கொடுக்குமாறு வற்புறுத்தி உள்ளனர்.

    அவர் பணம் என்னிடம் இல்லை . திருப்பூரைச் சேர்ந்த ஒருவரிடம் கொடுத்துள்ளேன். அவர் அமைச்சர் ஒருவரிடம் கொடுத்து வேலைக்காக பேசிக்கொண்டு உள்ளார் என கூறியுள்ளார். மீண்டும், மீண்டும் பணம் கேட்கவே பணத்தைத் திருப்பித் தர முடியாது , உன்னால் ஆனதைப் பார் என மிரட்டும் வகையில் அவர்கள் பேசியதாக கூறப்படுகிறது. இதையடுத்து பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் திருப்பூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் கொடுத்ததாக கூறப்படுகிறது.

    இந்த நிலையில் வேலைக்காக பணம் கொடுத்து பாதிக்கப்பட்டவர் மற்றும் பணம் பெற்றவர் பேசிக் கொள்ளும் ஆடியோ பல்லடம் பகுதியில் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

    ×